நலம், நலமறிய ஆவல் 31: எரியும் பாதங்கள் ஏன்?
என் வயது 60. கடந்த ஓராண்டாக இரண்டு கால் பாதங்களிலும் (அடிப்பகுதி) எரிச்சல் உள்ளது. மாலை, இரவு நேரங்களில் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில்தான் உள்ளது (90 மற்றும் 130 தான்). வாத கேசரித் தைலத்தை, சில நாள் தேய்த்து வந்தும் குணமாகவில்லை. வீட்டுக்குள் நடக்கும்போதும், செருப்போடு வெளியில் செல்லும்போதும் அதிக எரிச்சலை உணர்கிறேன். தயவு கூர்ந்து இதற்குத் தீர்வு அளிக்க வேண்டுகிறேன்!
- ப.வெங்கடாசலம், அவிநாசி
சர்க்கரை நோய் உள்ளவருக்குக் கால் நரம்புகள் பாதிக்கப்படுவது மிகவும் சகஜம். சர்க்கரை நோய் தொடர்ந்து கடுமையாக இருக்கும்போது உடலில் உள்ள புறநரம்புகள் (Peripheral Nerves) எல்லாமே பாதிக்கப்படும். அதற்கு 'டயபடிக் நியுரோபதி' (Diabetic Neuropathy) என்று பெயர். தமிழில் இதை 'நரம்பு வலுவிழப்பு நோய்' என்கிறார்கள். மற்ற நரம்புகளை ஒப்பிடும்போது, கால் நரம்பு பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். அப்போது கீழ்க்காணும் அறிகுறிகள் ஏற்படும்:
கால் மரத்துப்போகும்.
காலில் எரிச்சல் ஏற்படும்.
மதமதப்பு உண்டாகும்.
ஊசி குத்தும் வலி உண்டாகும்.
எரிச்சலும் வலியும் இரவில் அதிகமாக இருக்கும்.
பஞ்சு மேல் நடப்பதுபோலிருக்கும்.
பாதங்கள் குளிர்ந்திருக்கும்.
செருப்பு கழன்று போவதுகூட தெரியாத அளவுக்கு உணர்வு குறைந்து போகும்.
என்ன காரணம்?
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை எகிறும்போது, அந்தச் சர்க்கரையானது 'சார்பிட்டால்' எனும் வேதிப்பொருளாக மாறி, புறநரம்புகளில் படியும். அப்போது அது நரம்பிழைகளைப் பாதிக்கும். காலில் ஏற்படுகின்ற தொடு உணர்வு, வெப்ப உணர்வு, வலி உணர்வு, அதிர்வு போன்றவற்றை மூளைக்கு எடுத்துச் சென்று நமக்கு உணர்த்துவது புற நரம்புகள்தான். இந்த நரம்புகளை 'சார்பிட்டால்' பாதிக்கும்போது நரம்பு செல்களில் செய்திகள் கடத்தப்படும் வேகம் குறைகிறது. இதன் விளைவாகக் கால் மரத்துப் போகிறது. மதமதப்பு ஏற்படுவதும், பஞ்சு மேல் நடப்பது போலிருப்பதும் இதனால்தான்.
மேலும், இவர்களுக்கு ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படுவதால் நரம்பு செல்களுக்குத் தேவையான ரத்தமும் கிடைப்பது இல்லை. முக்கியமாக, நரம்பு முனைகளுக்கு ஊட்டச்சத்து, ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தால் முதலில் எரி்ச்சலும், அதைத் தொடர்ந்து ஊசி குத்தும் வலியும் உண்டாகின்றன. பாதம் குளிர்ந்தும் போகிறது.
என்ன பரிசோதனை?
கால் நரம்பு பாதித்திருக்கிறது என்பதை உறுதி செய்வதற்கு 'பயோதிசியோமெட்ரி' (Biothesiometry) பரிசோதனை உதவுகிறது. பாதத்தில் முக்கியமான நரம்புகள் இருக்கிற ஆறு இடங்களில் தொடு உணர்வு, அதிர்வு உணர்வு, வெப்ப உணர்வு, குளிர் உணர்வு போன்றவை எப்படி இருக்கின்றன எனக் கண்டறியும் பரிசோதனை இது. இதன் முடிவுகள் பாதத்தில் எந்த நரம்பு, எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகத் தெரிவித்துவிடும்.
ரத்தசோகை கவனிக்க!
சர்க்கரை நோய் தவிர, கால் எரிச்சலுக்கு தமனி ரத்தக் குழாய் பாதிப்பு, ரத்தசோகை, வைட்டமின் பி6, பி12 பற்றாக்குறை, ஃபோலிக் அமிலம் பற்றாக்குறை, உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைபிடிப்பது, சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு பற்றாக்குறை, சில மருந்துகளின் பக்கவிளைவு எனப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளன.
உங்களுக்கு என்ன காரணத்தால் காலில் எரிச்சல் வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். உங்கள் ரத்தச் சர்க்கரை அளவு சரியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களில் உங்கள் ரத்தச் சர்க்கரை அளவு சரியாக இருந்ததா என்பதை அறிய ஹெச்பிஏ1சி பரிசோதனையையும் மேற்கொள்ளுங்கள். இதுவும் சரியாக இருந்தால், மற்ற காரணங்களுக்கான ரத்தப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, காரணம் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். கால் எரிச்சல் குறைந்துவிடும்.
என்ன சிகிச்சை?
பாத எரிச்சலைக் குணப்படுத்த வேண்டுமானால், முதலில் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது முக்கியம். வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை டாக்டர் யோசனைப்படி மறுபரிசீலனை செய்து, அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளை முறைப்படி பின்பற்ற வேண்டும். ரத்தச் சர்க்கரை அளவு, உணவு உண்டபின் 140 மி.கிராமுக்குக் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தொடர்ந்து ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் வைத்திருந்தால் மட்டுமே கால்வலி, எரிச்சல், மதமதப்பு போன்ற தொல்லைகள் குறையும். மேலும் உடலில் காணப்படும் மற்ற காரணங்களுக்கும் சிகிச்சை பெற வேண்டும். அதுவரை அந்த அறிகுறிகளைக் குறைப்பதற்கென்றே இருக்கிற நரம்பூட்ட மாத்திரைகளையும் கால் எரிச்சலைக் குறைக்கும் மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும். நரம்பூட்ட ஊசிகளையும் போட்டுக்கொள்ளலாம். பாதங்களில் தேய்த்துக்கொள்ளவும் தற்போது களிம்புகள் கிடைக்கின்றன.
'நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.